
“ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்கச் சொல்லுங்கள், ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு எப்போது கொத்தும் என்று அவருக்கு தெரியாது” – நாமல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘ரொஷான் அண்ணாவுக்கு கவனமாக இருக்கச் சொல்லுங்கள். ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு ரொஷான் அண்ணாவை எப்போது கொத்தும் என்று தெரியாது’ என நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ரொஷான் ரணசிங்க;
‘கடந்த வாரம் ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு வருகை தந்து என்னை அழகாக ப்ரேம் செய்ய முயற்சித்தார். நான் நாமல் ராஜபக்ஷ எம்பிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சரித் அவர்களை சினமன் கிரேன்ட் இல் சந்தித்துள்ளார். இதன்போது நாமல் ‘ரொஷான் அண்ணாவுக்கு கவனமாக இருக்கச் சொல்லுங்கள். ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு ரொஷான் அண்ணாவை எப்போது கொத்தும் என்று தெரியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால் பாம்பு நல்லது. பாம்பு தீண்ட வேண்டியது பிழையான இடத்தையே.. தனது விசத்தினை பாம்பு வேறு இடத்தில் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் பாம்பே ஆபத்தினை சந்திக்க நேரிடும். கொள்ளை, ஊழல், நிதிமோசடி ஆகியனவற்றை வெளிப்வபடுத்திய என்னிடமா ரணில் என்கின்ற பாம்பு விசத்தினை கக்க வேண்டும்?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ;
‘..ரொஷான் ரணசிங்க அமைச்சர் அவர்களே நான் அவ்வாறான கருத்தொன்றினை தெரிவிக்கவில்லை. ரொஷான் ரணசிங்க தெரிவித்த கருத்தானது மூன்றாவது நபரின் கருத்தாக அமையலாம். அல்லது பிரிதொருவருரின் கருத்ததாக அமையலாம். ரொஷான் ரணசிங்க மீது குற்றம் சுமத்தவில்லை. அவருக்கு எவரேனும் தவறான கருத்தினை சொல்லியிருக்கலாம். அதனை தயவு செய்து மீளப்பெற்றுக்கொள்ளுங்கள். நான் அவ்வாறான கருத்தொன்றினை முன்வைக்க வேண்டிய தேவையில்லை. அவர் என்னுடைய நண்பரும் ஆவார். ஆகையால் நான் பிரிதொருவரிடம் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. நேரடியாக அவருக்கே தெரிவித்திருப்பேன். கடந்த வாரம் சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் அவர் என்னிடம் கேட்டிருந்தார். அது தொடர்பிலும் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். மூன்றாம் தரப்பொருவரின் வாயிலாக அவருக்கு தகவல் அனுப்பவேண்டிய தேவை எனக்கில்லை..’
அமைச்சர் ரொஷான் ரணசிங்க;
‘.. சரித் என்பவர் பிழைடயான தகவலை தந்திருப்பாராயின் அதனை நான் மீளப்பெற்றுக்கொள்கின்றேன். எனினும் அவரிடம் நான் வினவிய போது பொறுப்புடன் குறித்த விடயத்தினை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். சரித் என்பவர் நண்பர் ஒருவர். நாமல் ராஜக்சவின் வாயிலாகவே அவர் நண்பராக அறிமுகமாகினார்..’