பயணியுடன் வாக்குவாதம் – காதை கடித்து விழுங்கிய பஸ் நடத்துனர்..!

பயணியுடன் வாக்குவாதம் – காதை கடித்து விழுங்கிய பஸ் நடத்துனர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறி கொடகம வரை பஸ்ஸிற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார்.

அப்போது, ​​பஸ்ஸின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, ​​நடத்துனர் பயணியை தாக்கி காதைக் கடித்து விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோமாகம நகரை அண்மித்த போது குறித்த பயணியின் காது பகுதி காணவில்லை என குறித்த இளைஞருக்கு மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.

அப்போது, ​​குறித்த பயணி, மீகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தி, காதின் ஒரு பகுதி காணாமல் போயிருப்பதை அறிந்து, குறித்த மீகொட பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

அதேநேரம் பஸ்ஸில் மறைந்திருந்த நடத்துனரை மீகொட பொலிஸார்கைது செய்ததோடு காயமடைந்த பயணியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாக மீகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு, அவிசாவளையில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.