ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நபர்களை ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது.
அதற்கமைவாக முன்னாள் கடற்படை தளபதிகளான அட்மிரல் ஜயந்த பெரேரா, அட்மிரல் ஜயந்த கொலம்பகே, எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா ஜயவர்தன இந்த சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டிய நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே குறித்த முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் பலராலும் குற்றம் சாட்டப்படிருந்தவரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இச்சம்பவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா முறைகேடுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வழக்கிலிருந்து கோத்தபாயவை தப்புவிக்கும் வகையில் பொய்ச்சாட்சியமளித்த ரக்னா லங்கா நிறுவன முன்னாள் பொதுமுகாமையாளர் காமினி ஜயரத்னவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.