ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றார் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
‘தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட அவரது குழுவினர் ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
மக்கள் விடுதலை முன்னணியினர் இந்திய எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டு நடைமுறைக்கு ஏற்றால் போல் செயற்பட முனைவது வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது.’ என்றார்.