இங்கிலாந்து – பெல்ஜியம் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் பெல்ஜியத்தின் கென்ட் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. முதல் இரு நாட்களில் இங்கிலாந்து அணி 2 வெற்றியும், பெல்ஜியம் ஒரு வெற்றியும் பெற்றிருந்தது.
இந்நிலையில் கடைசி நாளான நேற்று மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே 6-3, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் காப்பினை தோற்கடித்தார். இதன் மூலம் போட்டியில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, டேவிஸ் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
79 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி வென்ற முதல் டேவிஸ் கோப்பை இதுவாகும். கடைசியாக 1936-ம் ஆண்டு வென்று இருந்தது. 115 ஆண்டுகால டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரலாற்றில், ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து அணி மகுடம் சூடுவது இது 10-வது முறையாகும்.