மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலிடம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகப்பிரிவு-
மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், கல்வி வளர்ச்சியில் அடைவு மட்டத்தை எட்டி தொடர்ந்தும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடத்தை பெற்றுள்ளமையை பாராட்டி மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தற்போது வெளியாகியுள்ள 2023ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது 75.5 % சதவீதமான சித்தி மட்டத்தை பெற்று, மாகாண மட்டத்தில் முதற்தர வலயமாக பிரகாசித்துள்ளமையை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பங்களிப்பு மிக மேலானது. பல சவால்களுக்கு மத்தியில் இவ்வாறானதொரு பரீட்சை பின்னணியை தோற்றுவிப்பதற்கு அமீர் அலி அவர்கள் எடுத்த முயற்சிகள் அளப்பரியது.
அதேபோன்று, மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் தொடர்ந்தேர்ச்சையாக குறித்த வலயத்தின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார்கள்.
குறிப்பாக, எமது கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இது தொடர்பில், ஜனாதிபதி, ஆளுநர், கல்வி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரை தொடர்ந்து சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை சந்திப்பதற்கு என்னையும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதையும் இத்தருணத்தில் நினைவுகூறுவது பொருத்தமாகும்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாண மக்களது அடிப்படை தேவைகளை மையப்படுத்தி, அதனை நிவர்நிவர்த்திப்பதற்காக என்றும் தியாகங்களை செய்து வருகின்ற ஒரு கட்சியாகும். அதன் அடிப்படையில் கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வலயத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது, முடியாது என்று சொல்லி பலர் நிராகரித்த வேளையிலும் கூட, விடாப்பிடியாக அதன் இலக்கினை அடைந்ததுடன், எதிர்கால கல்விச் சமூகத்துக்கு தம்மாலான முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அமீர் அலி அவர்கள் கடுமையாக உழைத்தார்.
இதன் பிரதிபலனாகவே இவ்வாறான பரீட்சை பெறுபேறுகளை எம்மால் நோக்க முடிகின்றது. கல்வி மேம்பாட்டுக்காக உதவியவர்களை என்றும் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படமாட்டார்கள். அவர்கள் என்றும் நினைவுகூறப்படுவார்கள்.
மேலும், மட்டக்களப்பு மத்தி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதற்காக உழைத்த மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாணாக்கரின் பெற்றோர்கள் ஆகியோருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.