களுபோவில வைத்தியசாலையில் குவிந்துவரும் இனந்தெரியாத சடலங்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் 6 மாதங்களுக்கும் மேலாக இனந்தெரியாத சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதால், நாளாந்தம் சேகரிக்கப்படும் சடலங்களை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் (களுபோவில வைத்தியசாலை) மரண விசாரணை அதிகாரி பரிந்த கொடுகொட தெரிவித்துள்ளார்.
இந்த சடலங்களில் பெரும்பாலானவை வழியில் விபத்துக்கள் காரணமாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், உரிமையாளர்கள் இதுவரை முன்வராததால், விசாரணைகளை மேற்கொண்டு அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸாரே அகற்ற வேண்டும் அல்லது காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன் வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பல தடவைகள் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
கொஹுவல, மொரட்டுமுல்ல, கிருலப்பனை, மொரட்டுவ, இங்கிரிய, மஹரகம, மருதானை, பிலியந்தலை, வாதுவ, எகொட உயன ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து பெரும்பாலான சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த சடலங்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு விசாரணைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பரிந்த கொட்டுகொட மேலும் தெரிவித்துள்ளார்.