மூன்றாவது சுற்றில் சிமோனா ஹாலேப் வெளியேற்றம்

பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா, ஷரபோவா ஆகியோர் முன்னேறியதோடு முன்னணி வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலேப் போட்டியில் இருந்து வெளியேறினார்.

பாரீஸ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கிராண்ட் ஸ்லாம் நாயகனான ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ûஸ 6-2, 7-6 (7/1), 6-3 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்றது.வெற்றிக்குப் பின்னர் ஃபெடரர் கூறுகையில், “உண்மையிலேயே இது கடினமான ஆட்டமாக இருந்தது. இந்த வெற்றிக்கு கடினமாக முயற்சித்தேன். இரண்டாவது செட்டைக் கைப்பற்றியது ஆட்டத்தில் திருப்புமுனை’ என்றார்.

போட்டித் தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள மற்றொரு சுவிட்சர்லாந்து வீரரான ஸ்டன் வாவ்ரிங்கா, செர்பியாவின் டுசன் லஜோவிச்சை எதிர்கொண்டார். இதில் வாவ்ரிங்கா 6-3, 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றி பெற்றதோடு தனது அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனுடன் வாவ்ரிங்கா மோதவுள்ளார்.

ஷரபோவா வெற்றி: மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனான ரஷியாவின் மரியா ஷரபோவா சக நாட்டு வீராங்கனை விட்டாலியா டயட்சென்கோவை 6-3, 6-1 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தினார்.

ஷரபோவா மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை சந்திக்க உள்ளார்.

எதிர்வரும் ஆட்டம் குறித்து ஷரபோவா கூறுகையில், “ஸ்டோஸர் மிகவும் சவால் அளிக்கக் கூடிய வீராங்கனை. களிமண் தரையில் விளையாடுவதை விரும்புபவர். அவருக்கு எதிராக நான் சிறந்த சாதனைகளை கொண்டுள்ளேன். அதனை என்னால் தொடர முடியும் என்று நான் நம்புகிறேன்’ என்றார்.