இழுபறியாகி வந்த ஐ.ம.ச. வின் 4 தேசியப் பட்டியல் பெயர்கள் அறிவிப்பு

இழுபறியாகி வந்த ஐ.ம.ச. வின் 4 தேசியப் பட்டியல் பெயர்கள் அறிவிப்பு

– பட்டியலில் மனோ, சுஜீவ மற்றும் மு. காங்கிரஸ், ம. காங்கிரஸ் உறுப்பினர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இழுபறியில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர், ஐ.ம.ச. உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளர் மொஹமட் இஸ்மாயில் முத்து முஹம்மது (வவுனியா, சாளம்பைக்கேணி) ஆகியோரின் பெயர்களை பரிந்துரைப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.ம.ச. 5 தேசியப் பட்டியல் எம்.பிக்களை போனஸ் ஆசனங்களாக பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் திகதி, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு நியமிக்கப்பட்டார்.

மீதமுள்ள நான்கு ஆசனங்கள் தொடர்பான விவாதங்கள் இன்று வரை இடம்பெற்றிருந்ததோடு, இது நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

அதற்கமைய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் நிசாம் காரியப்பரின் பெயரைச் சேர்க்காமல் சமகி ஜன பலவேகய (SJB) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை சமர்பிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (12) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்ற வேண்டுமெனவும் அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான ரவூப் ஹக்கீம் எம்.பி., 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐ.ம.ச.  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தனது தலைமையிலான மு.காஇ ஆதரவு வழங்கியதாகவும், 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஐ.ம.ச. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு ஐ.ம.ச. இணங்கியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, SJB எத்தனை தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றிருந்தாலும், அதில் ஒன்றை ஶ்ரீ.ல.மு.கா. கட்சிக்கு வழங்குவதற்கு அது கடமைப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார.

எனவே தற்போது எஞ்சியுள்ள நான்கு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான பெயர்களை ஐ.ம.ச. பொதுச் செயலாளர் சமர்ப்பிக்கவில்ல என்றும், இது தமது கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறும் செயலாகும் என தீர்ப்பளிக்குமாறும் ரவூப் ஹக்கீம் விடுத்த கேரிக்கைக்கு அமைய குறித்த இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தககது.

COMMENTS

Wordpress (0)