“நிரூபித்தால் எம்பி பதவியை இராஜினாமா செய்கிறேன்”
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(18) மீண்டும் நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.
வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் நேற்றைய தினம் (17) நாடாளுமன்ற வாதத்தில் தெரிவித்திருந்தமைக்கு இன்று பதிலளிக்கையிலேயே நாமல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சையின் போது, நாமல் ராஜபக்ச அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதற்கு பதில் அளித்த நாமல் ராஜபக்ஷ, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஏனைய குற்றச்சாட்டுகளைப் போன்று இதுவும் அரசியல் இலாபங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும், தான் குளிரூட்டப்பட்ட தனியறையில் பரீட்சை எழுதியிருப்பின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படின் தான் எம்பி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவ்வாறு இல்லையென்றால் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
மேலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனவும் இது இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.