மாணவி கடத்தல் – வௌியான புதிய தகவல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தவுலகலவில் 5 மில்லியன் ரூபா கப்பம் கோரி பாடசாலை மாணவி ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி காஞ்சனா கொடிதுவக்கு உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் இன்று காலை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரையும் நாளை (15) வரை தடுப்புகாவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், மாணவியை அவரது தந்தையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர் இன்று அதிகாலை கம்பளை, ஜயமாலபுர பகுதியில் வைத்து தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான மொஹமட் நசீர் என்பவர், அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், அதே நேரத்தில் வேனின் சாரதியான மொஹமட் அன்வர் சதாம் என்பவர் கம்பளை கஹடபிட்டிய பகுதியில் வைத்து தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடத்தப்பட்ட 18 வயதான மாணவி, பிரதான சந்தேகநபரின் தாயின் சகோதரனின் மகள் ஆவார்.
மாணவியை கடத்தப் பயன்படுத்தப்பட்ட வேன் கம்பளை, கஹடபிட்டிய பகுதியில் உள்ள வாடகை வாகன இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கடத்தல் சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தவுடன், அதன் பதில் பொறுப்பதிகாரியாக சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர், மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மூலம் வேனின் உரிமையாளரை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம், வேன் பொலன்னறுவை பகுதியில் இருப்பது அடையாளம் காணப்பட்டதுடன், பொலன்னறுவை பொலிஸாருக்கு தகவல் அளித்த பின்னர், வாகனம் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டது.
அதற்குள், இந்த வேனில் சென்ற பிரதான சந்தேகநபரும் மாணவியும் பேருந்தில் ஏறி மட்டக்களப்பு பகுதிக்குச் சென்றுள்ளதுடன், அதே நேரத்தில் அவர்களுக்கு உதவிய இரண்டு உதவியாளர்களும் கம்பளை பகுதிக்குத் திரும்பிவிட்டனர்.
பிரதான சந்தேகநபர், மாணவியின் தந்தையிடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா கப்பம் மற்றும் ஒரு வேனை கோரும் ஒலிப்பதிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வேலை செய்து நாடு திரும்பியுள்ள பிரதான சந்தேகநபர், அந்த இளம் பெண்ணுக்காக பணம் செலவழித்து, வீட்டைக் கட்டியுள்ளதுடன், அவரது தந்தைக்கு வேன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ள தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த தகவல் உண்மையா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பொலன்னறுவை பொலிஸாரின் பொறுப்பிலிருந்த வேனும் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபருடன் குறித்த மாணவி, அம்பாறை மற்றும் கல்குடா பகுதிகளில் உள்ள விடுதிகளில் இரண்டு இரவுகள் தங்கியிருந்த போதிலும், தான் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்று மாணவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும், இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது