![இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது : என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் என்கிறார் பிரேம்நாத் சி தொலவத்த இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது : என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் என்கிறார் பிரேம்நாத் சி தொலவத்த](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2025/02/Premnath-C.-Dolawatte.jpg)
இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது : என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் என்கிறார் பிரேம்நாத் சி தொலவத்த
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இழப்பீடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தயவு செய்து என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள். அதற்கமைய குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு எதிராக எம்மால் நீதிமன்றம் செல்ல முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை சுங்க வரலாற்றில் பாரிய மோசடியாக 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். அதனையும், தண்ணீரில் அடங்கியுள்ள புற்றுநோய் மூலக்கூறுகள் தொடர்பான சர்ச்சையையும், நெல்லுக்கான உத்தரவாத விலை குறித்த சிக்கல்களையும் மறக்கச் செய்வதற்காக தற்போது முன்னாள் அமைச்சர்களும், எம்.பி.க்களும் பெற்றுக் கொண்ட இழப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இழப்பீடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தயவு செய்து என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டவாறு இந்த இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட முறைமையை தொடர்பில் எனக்கு தெரியப்படுத்துங்கள். அதற்கமைய குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு எதிராக எம்மால் நீதிமன்றம் செல்ல முடியும்.
அதற்கமைய நீதிமன்றத்தின் ஊடாக அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்று, அதனை மீள அரசாங்கத்திடம் கையளிக்க முடியும். 25 இலட்சம் அதிகபட்ச இழப்பீடு தொடர்பிலும் தற்போது பேசப்படுகிறது. அனர்த்த முகாமைத்துவ சட்டம் என்பது இயற்கை பேரிடர்களால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்காக நிவாரண கொடுப்பனவு வழங்கும் முறைமையாகும். எவரேனும் ஒருவரது பரம்பரை சொத்துக்களை அழிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அவற்றை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யவும் முடியாது.
எனவே அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைக் காண்பித்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டுக் கொள்கின்றேன். தேசிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் மீது பழிபோடும் அரசாங்கத்திடம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லத்தை மீளப் பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை. எனவே தான் மக்களை கடிதம் அனுப்புமாறு கோருகின்றனர். மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.