வைத்தியரின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளின் ஊடாக விசாரணை

வைத்தியரின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளின் ஊடாக விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று (12) பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அனுராதபுரம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ஜெயவீர மற்றும் அதன் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோகர் நிசானி செனவிரத்ன ஆகியோருக்கே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸ் பரிசோகர் ஏ.சி. தயானந்தா சமர்ப்பித்த ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவல்களைக் கருத்தில் கொண்டு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் எடுத்துச் சென்ற வைத்தியரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மேற்கொண்ட மற்றும் பெறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விரிவான பகுப்பாய்வு அறிக்கையை பொலிஸாருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்து உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்தா தெரிவித்ததாவது, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி, கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாரின் ஊடாக எமக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இந்த வாக்குமூலங்களில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றம் குறித்து சிசிடிவி கெமரா காட்சிகள் மற்றும் பல அம்சங்கள் மூலம் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வைத்தியரை கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் சந்தேக நபரால் கடத்தப்பட்ட வைத்தியரின் கையடக்க தொலைபேசி குறித்த தகவல் அறிக்கையை உடனடியாக பொலிஸாருக்கு வழங்க தொலைபேசி நிறுவன நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தாமதமின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்தார்.

34 வயதுடைய குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு, அவர் கல்னேவ விசேட பொலிஸ் குழுவினால் கல்னேவ, ஹெலபதுகமவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றம் தொடர்பாக நேற்று பிற்பகல் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கும் வரையில், சந்தேக நபர் கல்னேவ பொலிஸாரால் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இருப்பினும், சந்தேக நபர் கல்னேவ பொலிஸ் நிலையத்தில் ஒரு விசேட பொலிஸ் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)