
இஸ்ரேல் தாக்குதலில் கைகளை இழந்த 9 வயது காசா சிறுவனின் புகைப்படம்!
சமர் அபு எலூஃப்,பாலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் 51,000இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா தெரிவிக்கிறது. காயமடைந்தவர்களிலும் குழந்தைகளே அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் புகைப்படம் World Press Photo 2025 ஆக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப், நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக எடுத்த இந்தப் புகைப்படத்தில், 9 வயது மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 புகைப்படங்களில் இருந்து மதிப்புமிக்க 68வது World Press Photo போட்டியின் வெற்றியாளராக மர் அபு எலூஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
World Press Photo அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அபு எலூஃப் கூறுவதாவது, “மஹ்மூத்தின் தாயார் எனக்கு விளக்கிய மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. மஹ்மூத் தனது கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் அவளிடம் சொன்ன முதல் வாக்கியம், ‘நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?’ என்பதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது சத்தமாகப் பேசும் ஒரு அமைதியான புகைப்படம். இது ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது, ஆனால் தலைமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பரந்த போரின் கதையையும் சொல்கிறது,” என்று World Press Photo நிர்வாக இயக்குனர் ஜூமனா எல் ஜெய்ன் கௌரி கூறுகிறார்.
மார்ச் 2024 இல் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மஹ்மூத்தின் ஒரு கை துண்டிக்கப்பட்டது. மறு கை சிதைந்தது என World Press Photo அமைப்பு அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.