கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும்

கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர் தரப்பு மற்றும் சிவில் சமூகத்துக்கு பொறுப்புகள் காணப்படுகின்றன. தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் விழுந்துள்ள படுகுழியில் இருந்து மீள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2028 நாட்டிற்கு தீர்க்கமானதொரு வருடமாகும். 2028 முதல் நாம் கடனை மீளச் செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை திருப்பிச் செலுத்துமாறு IMF தெரிவித்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதை 2028 ஆகக் குறைத்து இணக்கப்பாட்டை எட்டியது.

எனவே, 2028 ஆம் ஆண்டுக்குள் கடனை அடைக்க அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சி எமக்கு தேவை. 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும் என என நிபுணர்கள் கூறுகின்றனர். அரச வருவாயை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்புக்களை அதிகரிக்க வேண்டும். இவற்றைச் செய்ய முடியாவிட்டால், நமது நாடு மீண்டும் ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான துயரத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தறை உராபொல ஸ்ரீ ரத்தனஜோதி பிரிவேனா வித்யாயநதத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடந்து வரும் கல்வி மற்றும் கலாச்சார கண்காட்சியில் நேற்று (13) பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சியாமோபாலி மகா பீடத்தின் ஸ்ரீ ரோஹண பிரிவின் மகாநாயக்கர், வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தங்கல்லேன ராஜமகா விஹாராதிபதி, ஸ்ரீ சுகத சாசனதஜ, புகழ்பெற்ற ஸ்ரீ தம்மராக்ஷித வினய விஷாரத சங்கைக்குரிய அகலபட பியசிறி மகாநாயக்க தேரரின் அழைப்பின் பேரிலே எதிர்க்கட்சித் தலைவர் இதில் கலந்து கொண்டார்.

இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு மதிப்பு சேர்க்க வேண்டும். நாடு வீழ்ச்சி கண்டால், அது அரசியல், இன, மத அல்லது வர்க்க வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கும். நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் நடவடிக்கை கல்வி மற்றும் சுகாதாரம், தொழில், விவசாயம், சேவைகள் போன்ற துறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். புதிய வாயப்புகளைத் தேட வேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது, செயல்களாலும் அபிவிருத்தியை யதார்த்தமாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவசக் கல்வியின் ஊடாக நவீன கல்வி வழங்கப்பட வேண்டும்,

இலவசக் கல்வி மூலம் நாட்டின் சிறார்களுக்கு நவீன கல்வியை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும். உலகின் மிகவும் அபிவிருத்தி கண்ட நாடுகளைப் பார்க்கும்போது, ​​அந்த நாடுகளின் கல்வி முறைகள் மிகவும் வலிமையானவை என்பதைக் காண்கிறோம். அங்கு புதுமைகள் மற்றும் நவீனம் காலத்துக்கு காலம் உட்புகுத்தப்படுகின்றன.

சர்வதேச தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதாலும், புதிய கல்வி முறைகள் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கல்வியை வழங்குவதாலும், அபிவிருத்தி கண்ட நாடுகள் கல்வித் துறையில் உச்சத்தை எட்டியுள்ளன. பின்லாந்து, தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வியும் சுகாதாரமும் மனித உரிமையாக அமைய வேண்டும்,

நவீன உலகில், பல நாடுகள் நவீன கல்வியில் பயன்படுத்தும் உபகரணங்கள் நமது நாட்டில் பயன்படுத்துவதில்லை. நமது நாட்டின் இலவசக் கல்வி முறையில் ஸ்மார்ட் திரைகள், கணினிகள், டேப்லெட் கணினிகள் போன்றவை பயன்பாட்டில் இல்லை. கல்வியை மனித உரிமையாக்கி, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நாம் உறுதிபூண வேண்டும்.

இலவச கல்வியும், இலவச சுகாதாரமும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களாகும். எனவே இவை மனித உரிமைகளாக அமைந்து காணப்பட வேண்டும். இதில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் அடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து நாம் பேசி வருகிறோம். இதற்கு தனிநபர் பங்களிப்பைக் கணக்கிட வேண்டும். இதைச் சரிசெய்ய நாம் தனி நபர்களினது திறன்களையும் மனித வள மேம்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும். இதற்கு ஏற்றாற் போல் இலவசக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

COMMENTS

Wordpress (0)