பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடர் முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொகுசு ஜீப் வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதன் மூலம், அப்போதைய அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை ஆராய்வதற்காக நவம்பர் 4 ஆம் தி்கதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டது.

இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று எஸ். துரைராஜா, மேனகா விஜேசுந்தர, சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

மனு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பௌசி சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை, மேலும் அவரது பெயர் திறந்த நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டபோதும், அவர் அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதன்படி, இந்த மனு தொடர்பான அழைப்பாணையை நான்கு வாரங்களுக்குள் பிரதிவாதியான முன்னாள் அமைச்சருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டது.

இந்த மனுவில், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அவரது செயலாளராக பணியாற்றிய சித்தி மரீனா மொஹமட் உள்ளிட்ட எட்டு பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஆபத்து இடர் முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு நன்கொடையாக சொகுசு ஜீப் வாகனம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர் அதை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.

பின்னர், அமைச்சின் நிதியில் இருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் செலவு செய்து அவர் அந்த வாகனத்தை பராமரித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தத நிலையில்,அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை விதித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சராக, பௌசி அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இந்த செயலின் மூலம் அவர் அந்த உறுதிமொழியை மீறியதாகவும், அதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.