மாணவர்களின் சார்பில் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றக்கூடிய தகுதியிருந்தும் சில அதிபர்கள் சில மாணவ மாணவியரின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தகுதியுடைய மாணவர்களுக்காக விண்ணப்பம் செய்யாத அதிபர்கள், பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை வழங்க மறுத்த அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறான அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கும் பரிந்துரை செய்யத் தீர்மானித்துள்ளேன்.
பரீட்சைக்கு தோற்ற சந்தர்ப்பம் அளிக்கப்படாத அவ்வாறான மாணவர்களுக்கு இன்று நுழைவுச்சீட்டுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும். அதிபரினால் விண்ணப்பம் செய்யப்படாத மாணவர்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காத மாணவர்கள் அது குறித்து 1911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.