அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய கடற்படையினர் தீர்மானம்

அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர கடற்படையினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவண்ட் கார்ட் நிறுவனம் கடலில் வைத்து வெளிநாட்டுக் கப்பல்களுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது கடற்படையினர் அதற்கு வழித்துணை வழங்குவது வழக்கம். இதற்காக அவண்ட் கார்ட் நிறுவனம் சிறு தொகையொன்றை கடற்படையினருக்கு வழங்கி வந்திருந்தது.

எனினும் கடந்த ஜனவரி தொடக்கம் இதுவரை சுமார் 78 கோடி ரூபா கட்டணத்தை அவண்ட் கார்ட் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ள நிலையில், அதனை அறவிட்டுக் கொள்ள வழக்குத் தாக்கல் செய்ய கடற்படையினர் தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கும் அறிவித்துள்ள கடற்படையினர், எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் தமது நிலுவைப் பணம் செலுத்தப்படாதவிடத்து வட்டியுடன் சேர்த்து அதனை அறவிட்டுத் தருமாறு நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர்.