அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை பெற்றுக்கொள்வதில் மலையகத்தில் உள்ள பெற்றோர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களில் பாடசாலை நிர்வாகங்களால் சிரமங்கள் இல்லாமல் வழங்கப்பட்டது.
தற்போது புதிய நடைமுறையில் வவுச்சர் அடிப்படையில் சீருடை பெற்றுக்கொள்வதாக இருந்தால் நகரங்களில் கல்வி திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான நடைமுறை தற்போது மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட கடைகளில் சீருடை வழங்கப்படுகின்ற போது சீருடைக்காக மேலதிகமாக 200 ரூபாய் முதல் 300 ரூபாய் விற்பனையாளர்களால் வாங்கப்படுகின்றது.
பெற்றோர்கள் இதற்கு காரணம் கேட்கும் போது தரமான துணி எனவும் அதிகமாகவே இருப்பதாக கூறி பணத்தை தரும்படி வற்புறுத்துவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகளில் சீருடை வழங்கப்பட்டபோது, சீருடை பொதியில் அரசாங்காத்தினால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரமும் காணப்பட்டது.
தற்போது அவ்வாறான நிலைமை காணப்படவில்லை. இதேவேளை தரம் குறைந்த துணி வழங்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு துணியின் அளவும் குறைத்து வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக உண்மை தன்மை அறிந்து கொள்ளும் வகையில் சில கடைகளில் அவதானித்த போது பணம் பெறுவதை காணமுடிகின்றது.
அத்தோடு சில தையல் கடைகளின் உரிமையாளர்களிடம் சீருடை தொடர்பாக கேட்டபோது கடந்த காலங்களில் சீருடையின் அளவு சரியாக இருந்ததாகவும், தற்போது கடைகளின் ஊடாக வெட்டபட்ட துணிகளை வழங்குவதனால் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
சீருடையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் கல்வி திணைக்களத்தினால் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இவ்விடயத்தில் அசமந்தபோக்கை கடைப்பிடிப்பதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இலவசமாக சீருடை வழங்கப்படும் என கருத்தில் கொள்ளாது மாணவர்களுக்கு சீருடைகள் முறையாக கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.