அமைச்சர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் மீள் சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில் தற்போது சர்ச்சைக்குறிய நிலை தோன்றியுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

எனினும், வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படுகின்றமை தொடர்பில் இதுவரை தீர்மானமொன்று எட்டப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டார்.

வாகன அனுமதிப் பத்திரம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அகற்றப்பட்டமையை அடுத்தே இந்தக் குறித்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

மேலும், வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

வாகன அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அரச ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒரு முறை வாகன அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.