எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரமளவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின்போது இலங்கையுடன் 10 இருதரப்பு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி த ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவூட்டுதல், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பரிமாற்றம், பணத் தூய்தாக்கலுடன் தொடர்புடைய நிதி நிலைமைகள் பற்றிய புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய சில துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போதே இறுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் காணப்படுவதுடன், இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு ஆயுதப் பயிற்சிகளையும், பாதுகாப்புத் தளபாட உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.