சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு ஸ்ரீலங்காவே என குரல் கொடுப்பவர்கள் நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவு தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமலிருக்கவும், நாடு ஜனநாயக ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டுமெனின் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு என இருக்கும் ஒரே நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அவ்வாறெனின் நாட்டை பாதுகாக்க குழப்பமான சூழல் இல்லாது சுதந்திரமாகவும் அமைதியாகவும் பயணம் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இன, மத மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்னும், 30 வருட கொடூர யுத்தத்திற்கு பின்னர் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் அடிப்படைவாதிகள் அதனை சீர்குலைப்பதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.
இத்தகைய சூழ்நிலையில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அமைதி நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் இந்திய – இலங்கை ஆகியன செயற்படுத்தப்பட்டிருந்தால் பயங்கரவாதம் உருவாகியிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கிலும் தெற்கிலும் அடிப்படைவாதிகள் இருப்பதாகவும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் இப்போதிருந்தே விமர்சிக்க தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
1947 தொடக்கம் 1978 வரை நாடு அமைதியாக இருந்தாகவும், 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு விருப்பு வாக்கு முறைமையோடுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகியதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் யுத்தமொன்றுக்கு வழிவகுக்கக்கூடாது எனவும், அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாகவும, அமைதியாகவும் வாழும் சூழலும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தலோடு தெரிவித்தார்.