அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ஆறுவயது குழந்தைகள்கூட தங்களுக்கு வேண்டாதவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் செய்திகள் வராதநாளே இல்லை என்ற நிலையில் அங்குள்ள நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள், பொருட்காட்சிகள் மற்றும் இணையத்தளங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் பின்னணியைப்பற்றி தேசிய பொலிசார் தீவிரமாக விசாரித்து அனுமதி அளித்த பின்னரே ஒருவருக்கு துப்பாக்கி விற்பனை செய்ய முடியும் என்ற புதிய சட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாகவும், இதுகுறித்து தனது அரசு எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கைகளை விளக்கியும் நாட்டு மக்களிடையே இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்புரையாற்றினார். (உள்ளூர் நேரப்படி) காலை 11.40 மணியளவில் வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஆற்றிய இந்த சிறப்புரை அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாக நாடு முழுவதும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.