6 வருடங்களுக்குப்பின் மீண்டும் மம்முட்டி

மலையாள பட உலகில், ‘சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்து வரும் மம்முட்டி முதன்முதலாக, ‘மவுனம் சம்மதம்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த படம், 1989-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கே.பாலசந்தர் டைரக்ஷனில், ‘அழகன்,’ மணிரத்னம் டைரக்ஷனில், ‘தளபதி,’ ராஜீவ் மேனன் டைரக்ஷனில், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்பட பல தமிழ் படங்களில் அவர் நடித்தார்.

கடைசியாக, ‘வந்தே மாதரம்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த படம், 6 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்தது. அதன்பிறகு மம்முட்டி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. 6 வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘பேரன்பு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ராம் டைரக்டு செய்கிறார்.

இவர், தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ படத்தை டைரக்டு செய்தவர். ‘பேரன்பு’ படமும் ‘தங்க மீன்கள்’ படத்தைப் போல் ஒரு அப்பாவுக்கும், மகளுக்குமான கதைதான். அப்பாவாக மம்முட்டியும், மகளாக ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சாதனாவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் அஞ்சலி நடிக்கிறார்.

வல்லவன், பஞ்ச தந்திரம், பம்மல் கே.சம்பந்தம், கனா கண்டேன், காதலா காதலா, பிரியசகி உள்பட பல படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பன் தயாரிக்கிறார். கொடைக்கானலில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு அரங்கு அமைத்து படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.