முன்னணி வீரர்கள் பலர் இல்லாத போதும் அணியின் வெற்றிக்காக சில வீரர்கள் தொடர்ந்து போராடி உள்ளனர்.
இந்த வரிசையில் சங்கக்கார, ஜெயவர்த்தன, பிரண்டன் டெய்லர், மார்லன் சாமுவேல்ஸ், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் உள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறவில்ல. இதனால் வலுவான அணியாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது தடுமாறி வருகிறது.
அதே சமயம் பிராவோ, கெய்ல், பொல்லார்ட், ரசல், சிம்மோன்ஸ், சமி ஆகியோர் உலகம் முழுவதும் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் அணித்தலைவர் ஹோல்டர், சாமுவேல்ஸ் ஆகியோர் தனியாளாக இருந்து அணியின் வெற்றிக்காக போராடி வருகின்றனர்.
ஜாசன் ஹோல்டர்:-
24 வயதேயான ஹோல்டர் மட்டுமே தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை நாயகனாக இருந்து வருகிறார்.
இவரது ஊதியம் குறைவாக இருந்த போதும் அவர் கிரிக்கெட் வாரியத்துடன் மற்ற வீரர்களை போல் சண்டையிடவில்லை.
22 வயதிலே அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஹோல்டர் இளம் அணியை உருவாக்க போராடி வருகிறார்.
மார்லன் சாமுவேல்ஸ்:-
இவர் மட்டுமே தற்போது அணியில் உள்ள ஒரே அனுபவ வீரர். 34 வயதாகும் சாமுவேல்ஸ் 2000ம் ஆண்டு அணியில் நுழைந்தார்.
அணி தடுமாறும் போது தாங்கி பிடிப்பவர் இவர் மட்டுமே. 64 டெஸ்ட், 177 ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 78 ஓட்டங்கள் குவித்து மேற்கிந்திய தீவுகளுக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தார்.
பிராண்டன் டெய்லர்:-
அதல பாதாளத்தில் கிடந்த ஜிம்பாப்வே அணியை மீட்டெடுத்தவர் முன்னாள் தலைவர் பிராண்டன் டெய்லர்.
கடந்த 2004ம் ஆண்டு அணியில் நுழைந்த அவர், 11 ஆண்டுகளாக அணிக்காக சிறந்த பங்காற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 145 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். அதோடு தனது 29வது வயதிலே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வும் அறிவித்தார்.
ஜெயவர்த்தன:-
பல சீனியர் வீரர்கள் அணியை விட்டு போனாலும் இலங்கை அணியின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் ஜெயவர்த்தன.
1997ம் ஆண்டு அணியில் நுழைந்த அவர் உலகக்கிண்ணப் போட்டியோடு விடைபெற்றார்.
சங்கக்காராவும், ஜெயவர்த்தனவும் இணைந்து இலங்கை அணிக்கு 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தனர்.
மேலும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்திலும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தனர்.
சங்கக்காரா:-
இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றொரு தூணாக விளங்கிய சங்கக்காரா.
தனது 38வது வயதில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இலங்கை அணிக்காக விளையாட அவர் ஒரு போதும் மறுத்ததில்லை. அவர் ஓய்வு அறிவித்த பின்னரும் அவர் ஓய்வு பெறுவதை யாரும் விரும்பவில்லை.
மேத்யூஸ் கூட சங்கக்கார ஓய்வு பெறுவதை தடுக்க பல வழிகளில் முயன்று பார்த்தார்.
கிரிக்கெட் வாரியமும் அவரிடம் இன்னும் கொஞ்சம் காலம் விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அந்த அளவு இலங்கை அணிக்கு சிறந்து ஒரு பங்களிப்பு கொடுத்தவர்.
(நன்றி – தமிழ்வின்)