ஜெயலலிதா சொத்து வழக்கு 2ம் திகதி மீண்டும் இறுதி விசாரணை

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு அப்பீல் மனு மீது பிப்ரவரி 2ம் திகதி முதல் இறுதி விசாரணை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வை முந்தைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து நியமித்தார். இந்த அமர்வு ஜனவரி 8ம் திகதிக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் இறுதி வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி ஆர்.கே.அகர்வால் மாற்றப்பட்டு அவருக்கு பதில் நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு பதிவுத்துறை நேற்று மாலை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

நீதிமன்ற அறை எண்.11–ல் 52–வது வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் இறுதி விசாரணை பிப்ரவரி 2–ந் திகதி முதல் நடைபெறும் என்றும், அதற்குள் மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் முழு வழக்கையும் விசாரிக்க முடியாது என்பதால் விசாரிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை தினமும் நடைபெறுமா என்பது பற்றி பிற வழக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு மேலும் தெரிவித்துள்ளது.