தற்போது எமது நாட்டில் காணப்படுகின்ற விளையாட்டுத் துறையில் மாற்றத்தை கொண்டுவராவிடின் எதிர்வரும் காலத்தில் பாரிய அழிவை நோக்கி பயணிக்கும் ஆபத்து காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க எச்சரித்தார்.
விளையாட்டுத் துறை அமைச்சு உட்பட கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை எதிர்நோக்கும் பாரியளவிலான மறைமுகமான சவால்களுக்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரே பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள துறைமுகங்கள் அமைச்சில் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தற்போது எமது நாட்டில் காணப்படும் விளையாட்டுத் துறைசட்டமானது முதலாளித்துவ சட்டமாகவே அமைந்துள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை நான் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்திருந்தேன். அந்தவகையில் இது தொடர்பில் அண்மையில் பிரதமரும் வலியுறுத்தியிருந்தார்.
நடைபெற்று முடிந்த இலங்கைக் கிரிக்கெட் நிறுவன தேர்தலில் எனது தோல்வியினை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்த தேர்தலில் நான் போட்டியிடாமல் எந்தவொரு நபர் போட்டியிட்டிருந்தாலும் இந்நிலையே ஏற்பட்டிருக்கும். காரணம் எமது விளையாட்டுத் துறை சட்டமானது முதலாளித்துவங்களுக்கு ஏற்றவாறே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் எமது நாட்டின் கிரிக்கெட்டை நேசிக்கும் வகையில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து எனக்கு வாக்களித்த அனைத்து தரப்பினர்களுக்கும் நான் எனது நன்றியினை கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.