புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது என்று அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ, வடக்கு- கிழக்கை இணைக்கவோ சுதந்திர கட்சி அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
டிலான் பெரேரா தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நாடு துண்டாடப்படப் போவதாகவும், பௌத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமை நீக்கப்படப் போவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இவை எதுவும் கிடையாது. மக்களினதும், அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை பெற்றே அரசியலமைப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். எனத் தெரிவித்தார்.
13வது அரசியலமைப்பு எமது அரசியலமைப்பின் அங்கமாகும். 13வது திருத்தம் நாட்டின் இறைமைக்கு குந்தகமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர நாம் உடன்படோம். அரசியலமைப்பை குட்டிச் சாத்தானக காட்ட சிலர் முயல்கின்றனர். வெளிநாடுகளுக்கு தேவையானவாறு இதனை திருத்த மாட்டோம்.” என்றுள்ளார்.