சிறுநீரக மோசடி விசாரணைக்கு இந்திய உதவியை கோருகிறது இலங்கை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெறும் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்துக் கவனம் செலுத்திய சுகாதார அமைச்சு, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது.

சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் பாலித்த மஹிபால, தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்பாளர் உட்பட மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.

அதேநேரம், விசாரணை அறிக்கையின் பிரகாரம் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் சிறுநீரக மாற்று மோசடி குறித்த வினவப்பட்டது. 6 மருத்துவர்கள் இதனுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் எமக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. சி.ஜ.டிக்கு இது தொடர்பில் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வழங்குவதை தடைசெய்வதற்காக சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், வெளிநாட்டில் இருந்து உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு வருபவர்கள் சுகாதார அமைச்சிடம் முற்கூட்டியே அனுமதி பெறவேண்டும். இருந்தபோதும் உறுப்புக்களைத் தானம் செய்பவர்கள் தொடர்பில் வழங்கப்படும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.