கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா 330 ஓட்டங்கள் குவிப்பு

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் காலை 8.50 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணி 4 போட்டியிலும் தோற்று ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது. இதனால் இன்று ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? என்ற நிலையில் விளையாடியது.

இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் அடைந்த ரஹானேக்கு பதிலாக மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக புதுமுக வீரர் ஜஸ்பிரித் பம்ரா இடம் பெற்றார்.

ஆஸ்திரேலிய அணியிலும் இரண்டு மாற்றம் இருந்தது. காயம் அடைந்த மேக்ஸ்வெல், வில்லியம்சன் ஆகியோருக்கு பதிலாக ஷான் மார்ஷ், ஸ்காட்போலண்டு இடம் பெற்றனர். இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று ஆஸ்திரேலியாவை முதலில் விளையாட அழைத்தார்.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தது.

முதல் ஓவரிலேயே தொடக்க ஜோடியை இஷாந்த் சர்மா பிரித்து முத்திரை பதித்தார். ஆரோன் பிஞ்ச் 6 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 2–வது விக்கெட்டுக்கு வார்னருடன் கேப்டன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதனால் 10–வது ஓவரிலேயே அந்த அணி 61 ரன்னை எடுத்தது.

புதுமுக வீரர் பம்ரா இந்த ஜோடியை பிரித்தார். ஸ்டீவன் சுமித் 28 ரன்னில் அவரது பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 64 ஆக (11.5 ஓவர்) இருந்தார்.

அடுத்து வந்த பெய்லியை ரிஷிதவான் எளிதில் அவுட் செய்தார். அவர் 6 ரன்களே எடுத்தார். ஆஸ்திரேலியா 14.5 ஓவரில் 78 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.

அடுத்து ஷான் மார்ஷ் களம் வந்தார். மறுமுனையில் இருந்த வார்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஆடினார். அவர் 50 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். 62–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 14–வது அரை சதமாகும்.

ஆஸ்திரேலிய அணி 18.2–வது ஓவரில் 100 ரன்னை எடுத்தது.

ஸ்கோர் 114 ஆக இருந்தபோது ஆஸ்திரேலியாவின் 4–வது விக்கெட் சரிந்தது. ஷான் மார்ஷ் 7 ரன்னில் ரன்அவுட் ஆனார்.

பின்னர் வந்த மிட்சல் மார்ஷ், வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இவர்கள் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை சீராக உயர்த்தினர்.

பின்னர் அதிரடியை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். வார்னர் 113 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் அவருக்கு இது 5வது சதமாகும். மறுமுனையில் மிட்சல் மார்ஷ், 84 பந்துகளில் 102 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்து வீச்சை பறக்கவிட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்கள் குவித்தது..