
காம உணர்வை அதிகரிக்கும் ஹூபாரா பறவை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து
அபூர்வ பாலைவன பறவையினமான, ஹூபாரா பஸ்டார்டை (வேகமாய் ஓடக்கூடிய உயரமான ஒரு பறவை) வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விலக்கியிருக்கிறது.
இந்த ஹுபாரா பஸ்டார்ட் பறவையை வேட்டையாடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மனுச் செய்திருந்தது.
இந்தத் தடை எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளுடன் பாகிஸ்தானின் உறவுகளைப் பாதிக்கும் என்று அது வாதாடியது.
இந்தப் பறவையின் இறைச்சி காம உணர்வுகளை அதிகரிக்கும் என்று கருதப்படுவதால் இதனை வேட்டையாட அரபு நாட்டு ஷேக்குகள் வேட்டையாடும் நோக்கில் பாகிஸ்தான் வருவது வழக்கம்.
இந்த வேட்டைகளுக்காக, வளைகுடா நாடுகளின் அரச குடும்ப ஷேக்குகளை அழைப்பது என்பது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு தூண் என்று அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
இன்று உச்சநீதிமன்றத்தில் 4-1 என்ற பெரும்பான்மையில் இந்த வழக்கில் இந்தப் பறவையை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்று, இந்தப் பறவையை முற்றிலும் அழிந்துவிடாத அளவுக்கு வேட்டையாடலாம் என்று அனுமதித்தது.
ஆனால் செல்வாக்கு மிக்க வெளிநாட்டு விருந்தினர்கள் வேட்டையாடும்போது, யார் வேட்டையின் அளவை நிர்ணயிப்பது, அதை யார் கண்காணிப்பது என்பதெல்லாம் தெளிவாக்கப்படவில்லை.
ஏற்கனவே, உலகெங்கிலும் அருகி வரும் இந்தப் பறவையை எந்தக் கேள்வி முறையுமில்லாமல் வேட்டையாட அனுமதித்ததை சுற்றுச்சூழலாளர்கள் விமர்சித்துள்ளனர்.
