மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன. இதையடுத்து, ஈரான் மீது அந்த நாடுகள் விதித்த பொருளாதார தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, ஏராளமான தொழில் அதிபர்களுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பயணத்தின் ஒரு பகுதியாக இத்தாலி சென்ற அவர், அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இத்தாலிய நிறுவனங்களுடன், 1.25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.
பைப்லைன் மூலம் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் திட்டம், பிரான்ஸ் நாட்டுடன் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம், ரெனால்ட் உள்ளிட்ட பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி இத்தாலிய பிரதமர் மாட்டியோ ரென்சி இருவரும் இணைந்து இத்தாலியின் கலைப்பொருட்கள் சுரங்கமான கேப்பிடோலின் அருங்காட்சியகத்திற்கு சென்றனர்.
ஆனால், அங்குள்ள இத்தாலியின் விலைமதிப்பற்ற கலைப்பொருட்களான சிலைகள் அனைத்தும் வெள்ளை பெட்டிகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது. காரணம் ரோமின் பெண் மற்றும் ஆண் தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் நிர்வாண நிலையில் இருப்பவைகளாகும் இதனால் தங்கள் விருந்தினர் அதிருப்தி அடைய கூடாது என்பதற்காக அவற்றை பெட்டிகள் கொண்டு இத்தாலி அதிகாரிகள் மறைத்து விட்டனர்.
இது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர், இது குறித்து காட்டமாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக நமது நாட்டின் கலாசாரத்தை பாரம்பரியத்தை விட்டு கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.