மட்டக்களப்பு சிறீ விக்னேஸ்வரா மற்றும் ஒருமுழச்சோலை வித்தியால மாணவர்கள் வசம் முஸ்லிம் எய்ட் இனால் தாபிக்கப்பட்ட குடிநீர்வினியோக அமைப்புகள் ஒப்படைப்பு

500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் மட்டக்களப்பு மயிலம்பாவெளி சிறீவிக்னேஸ்வரா மாணவர்களிடம் முஸ்லிம் எய்ட் இனால் நிறுவப்பட்ட குடிநீர் வினியோகக் கட்டமைப்பும் மலசல கூடமும் பெப்ரவரி மாதம்11ம் திகதி கையளிக்கப்பட்டது. நாடாளவிய ரீதியில் முஸ்லிம் எய்ட் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு மனிதநேய அபிவிருத்திப் பணிகளில் இதுவும் ஒன்றாகும். பாடசாலை அதிபர் கே.சிறிதரன் தலைமையில் விக்னேஸ்வரா பாடசாலை நிகழ்வு நடைபெற்றது.
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலர் உதயசிறிதர், வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், கோட்க்கல்விப் பணிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியம், முஸ்லிம் எய்;ட் சிறிலங்கா பணிப்பாளர் பைசர்கான், முஸ்லிம் எய்ட் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.சிராஸ் ஆகியோருடன் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ‘ வலயக் கல்விப் பணிப்பாளர் தனது உரையில் ‘ வேறுபட்ட சமய நம்பிக்கையைக் கொண்டிருந்த போதிலும் முஸ்லிம் எய்ட் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இன, மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மனிநேயப் பணியாற்றி வருகின்றது ” எனத் தெரிவித்தார். முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் உரையாற்றுகையில் ‘2016ம் ஆண்டில் முஸ்லிம் எய்ட் தனது செயற்பாடுகளில் ஒன்றாக பின்தங்கிய பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு அவசியமான குடிநீர் மற்றும் நீர்ச்சுகாதார மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. இக் கருத்திட்டங்கள் மூலமாக சகல சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெற முடியும்’ எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறான மற்றுமொரு குடிநீர் வினியோகக் கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டு ஒருமுழச்சோலை தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைக்கும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் கையளிக்கப்பட்டது. சுனாமி, யுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட இக் கிராமத்திலுள்ள பாடசாலையில் 198 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.