முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்கவின் அடிப்படை உரிமை மீறல் மனு அடுத்த மாதம் 16ம் திகதி பரிசீலனை செய்யப்படவுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமெனக் கோரி ரோஸி சேனாநாயக்க இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு,நேற்றைய தினம் உச்ச நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மனுவை பரிசீலனை செய்வது குறித்து 16ம் திகதி தீர்மானிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அப்போதைய தேர்தல் ஆணையாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் சட்மா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 11 வேட்பாளர்கள் நாடாளுமன்றிற்கு தெரிவாகியதுடன், விருப்பு வாக்கு அடிப்படையில் ரோஸி சேனாநாயக்க 12ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
65320 விருப்பு வாக்குகளை தாம் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை விடவும் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமெனவும் ரோஸி குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் வேறு நபர்களின் விருப்பு வாக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மனுவில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.