ரஞ்சன் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்துகிறார் – சிசிர ஜயகொடி பகிரங்க குற்றச்சாட்டு

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, உடுவே தம்மாலோக்க தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தி ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இவ்வாறு ஊடகங்களில் பௌத்த பிக்குகளை தரக்குறைவாக பேசுவதும் இழிவுபடுத்துவதனையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

பௌத்தர் அல்லாத ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு பௌத்த பிக்குகளை இழிவுபடுத்துவது மிகவும் வருத்தமளிக்கின்றது.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன மத பேதம் பாராட்டாது பௌத்தர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இந்த விடயத்தை ரஞ்சன் ராமநாயக்க மறந்து விடக் கூடாது.

இதற்கு முன்னரும் களனி பொல்லேகல மானேவல்வத்த விஹாரையை அண்டிய தியான கூடமொன்றிற்குள் பிரவேசித்து ரஞ்சன் ராமநாயக்க குழப்பம் விளைவித்திருந்தார்.

பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களுக்கு எதிராக செயற்படுவதனை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ரஞ்சன் ராமநாயக்கவிடம் கோருகின்றேன் என சிசிர ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.