பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த வடமேற்குப் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது;
தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில், ஃபாருக் கான் என்ற உள்ளூர் அரசியல் தலைவரைக் குறிவைத்து திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் அவரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர்.
ரங்ஸாய் என்னுமிடம் வழியாக அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில், சாலையேரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தினர்.
முன்னதாக, தெற்கு வஜிரிஸ்தானையொட்டிய கைபர் பாக்துன்க்வாவில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் வெற்றிவிழாக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர்.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.