பாகிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
மார்டானில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் பெஷாவர் சென்று உள்ளது. பஸ் சுனெக்ரி மஜித் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பஸ்ஸில் இருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது, குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 30 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு வெடித்தபோது பஸ்ஸில் 50 பேர் இருந்து உள்ளனர்.
8 கிலோ எடை கொண்ட கண்ணி வெடியானது பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பலத்த காயம் அடைந்து உள்ளனர், எனவே உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் உள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதியினை பாதுகாப்பு படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டை கண்டுபிடித்து, செயல் இழக்க செய்யும் படையும் முகாமிட்டு உள்ளது. இதற்கிடையே தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணி தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பயம் மற்றும் பீதியானது தொற்றிக் கொண்டு உள்ளது.
பெஷாவர் பல்வேறு கொடூரமான தாக்குதலை சந்தித்து உள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவப் பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 148 குழந்தைகள் உள்பட 151 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இதனையடுத்து தீவிரவாதிகள் மீதான பிடியை சிலநாட்கள் இறுக்கிய பாகிஸ்தான், மீண்டும் தளர்த்திவிட்டது.