விசாரணைக்கு சவேந்திர சில்வா நாட்டிற்கு அழைப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டமைக்கு பல எதிர்ப்புகள் எழுந்தபோதும் முன்னைய ஆட்சிக்காலத்தில் அவை அப்படியே அடங்கிப்போயின.

தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், யுத்த குற்றம் புரிந்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபடி முன்னேற்றம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் முதலில் உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்தமைக்கமைய, மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளையும் தற்போது ஆரம்பித்துள்ளது.

யுத்தக் குற்றம் புரிந்த ராணுவ அதிகாரிகள் பட்டியலில் இலங்கை ராணுவத்தின் 40 அதிகாரிகள் உள்ளடங்குவதாக, அண்மையில் நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.