பெங்களூர்,ஜூன் 03 (டி.என்.எஸ்) மேகி நூடுல்ஸ் மாதிரியை சோதனைக்கு அனுப்பியுள்ள கர்நாடக அரசு, சோதனை முடிவுகள் வரும் வரை, யாரும் மேகி நூடுல்ஸை வாங்க வேண்டாம், என அறிவிறுத்தியுள்ளது.
பிரபல உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லி-யின் மேகி நூடுல்ஸில் ரசாயனம் அதிகமாக கலந்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்தியாவின், பல மாநிலங்களில் அப்பொருளுக்கு தடை எற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் மாதிரியை சோதனையும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு ‘மேகி நூடுல்ஸ்’ மாதிரியை எடுத்து சோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் கூறுகையில்,
”மேகி நூடுல்ஸ் மாதிரி எடுத்து சோதனைக்காக மைசூரு உணவு பொருட்கள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) ஆய்வு அறிக்கை கிடைக்கும். இதன் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்கும். இந்த ஆய்வில் திருப்தி ஏற்படாவிட்டால் வெளிமாநிலங்களில் ஆய்வு நடத்தப்படும். அதுவரை பொதுமக்கள் ‘மேகி நூடுல்சை’ யாரும் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.