அமெரிக்காவின் ஹவாய் தீவிலிருந்து ஜப்பானை நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணியொருவர் யோகாசனம் செய்ய வேண்டும் என அடம்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் ஹவாய்க்கு திருப்பப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் யுனைடெட் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான இவ்விமானம், கடந்த சனிக்கிழமை ஹவாய் தீவின் ஹொனோலுலு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கிப் புறப்பட்டது.
இவ்விமானத்தில் உணவு பரிமாறப்பட்டபோது பயணிகளில் ஒருவரான ஹையோங்டே பாயே என்பவர் விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று யோகாசனத்திலும் தியானத்திலும் ஈடுபட முயன்றார்.
மீண்டும் ஆசனத்தில் அமருமாறு அவரின் மனைவி மற்றும் விமான ஊழியர்கள் கோரியபோது அவர் ஆத்திரமடைந்து மனைவியை அப்பால் தள்ளிவிட்டார்.
அவரை மீண்டும் ஆசனத்தில் அமர வைப்பதற்கான முயற்சி பலனளிக்காததால் விமானத்தை மீண்டும் ஹவாய்க்கு திருப்புவதற்கு விமானிகள் தீர்மானித்தனர்.
பின்னர் எவ்.பி.ஐ. அதிகாரிகளால் ஹையோங்டே பாயே கைது செய்யப்பட்டார்.