சுவீடனைச் சேர்ந்த 104 வயதான மூதாட்டி ஒருவரை பாலர் பாடசாலையொன்றில் இணையுமாறு அந் நாட்டு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மஜா பேர்ஸ்ட்ரோம் எனும் இந்த மூதாட்டி இது குறித்து கூறுகையில், “104 வயதில் பாலர் பாடசாலையில் கல்வி கற்பதற்காக இணைவது வேடிக்கையானது.
நான் மாத்திரமே அந்த வகுப்பில் 104 வயது மாணவியாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இவர் பாலர் பாடசாலையில் இணைவது தொடர்பாக இப்பெண்ணின் 78 வயது மகளான பேர்ஜிட்டாவுக்கு அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருந்தனர். இக் கடிதத்தைப் பார்த்த பேர்ஜிட்டா பெரும் வியப்படைந்தார்.
மஜா பேர்ஸ்ட்ரோமை பேர்ஜிட்டாவின் தாயார் என அறியாமல் அவரின் வீட்டிலுள்ள ஒரு குழந்தை என அதிகாரிகள் எண்ணிவிட்டமையே இக் கடிதம் அனுப்பப்பட்டமைக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது.
2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறார்களை பாலர் பாடசாலைகளில் இணைப்பதற்கான கடிதங்களை அதிகாரிகள் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்த 100 வயதைக் கடந்தவர்களும் குழந்தைகளாக கருதப்பட்டுள்ளதாக உள்ளூர் பாடசாலைகள் பதிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரியான ஸ்டெஜெர்ட் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.