மரணச்சடங்குகளை நடத்தும் நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவர், பெண்ணொருவரின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோது, அப்பெண் சவப்பெட்டியை திறந்துகொண்டு எழுந்து, நான் எங்கே இருக்கிறேன் எனக் கேட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ஜெல்சென்கேர்சென் எனும் நகரைச் சேர்ந்த 92 வயதான இப்பெண் இறந்துவிட்டதாக உள்ளூர் மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தார். அதையடுத்து அவரின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் முன்ஸ்டெர்மன் நகரிலுள்ள மலர்ச்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்டன. இதன்போபோது அப்பெண் சவப்பெட்டியிலிருந்து எழுந்துகொண்டு, பேச ஆரம்பித்தவுடன் அந்நிறுவன ஊழியர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அம்பியூலன்ஸ்களும் அனுப்பப்பட்டன. எனினும், திங்கட்கிழமை காலை அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. அப்பெண்ணின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்டதில் தவறுகள் உள்ளனவா என்பதை அறிய விசாரணைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.