மிக் விமானக் கொள்வனவும் கோட்டாவும்

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் தனக்கு  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நீண்ட காலச்  சூழ்ச்சி என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுகளின் பின்புலத்தில் யுத்த வெற்றிக்கு, அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கம் அடங்கியுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்த்தரப்பினர் மீண்டும் அதை விமர்சிக்க  ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், வர்ஜீன் தீவுகளில், “பெலிமிஷா ஹோல்டின்” என்ற நிறுவனத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பிலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்தியுள்ளார்.

2006 ஆம் ஆண்டில் மிக் – 27 ரக நான்கு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும், விமானப் படையினர் வசமிருந்த மிக்-27 ரக மூன்று விமானங்கள் மற்றும் மிக்-23 ரக விமானம் என்பவற்றை திருத்துவதற்காகவும் யுக்ரேய்னிலுள்ள மிக் உற்பத்தி நிறுவனமான மாஷ் என்ற நிறுவனத்துடன் நேரடி தொடர்புகொண்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுக்ரேய்ன் மாஷ் நிறுவனம் முழுமையாக யுக்ரேய்ன் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்றும், அந்த நாட்டு சட்டத்தின் பிரகாரம் அவர்கள் கடன் அடிப்படையில் உபகரணங்களை விநியோகிக்க முடியாதெனவும் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

மேலும்,அதன் பிரகாரம் பெலமிஷா ஹோல்டின் என்ற நிதி நிறுவனம் அதற்கான கொடுக்கல் வாங்ககளுக்கான பண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக யுக்ரேய்ன் மாஷ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான டி.ஏ. பெரிகுடோ இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.