சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில், எண்ணெய் பொருளாதாரத்தை மட்டுமே நாடு சார்ந்திருக்கும் நிலையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க புதிய திட்டம் வகுத்துள்ளது.
வரிகளை அதிகரித்து, அரச செலவினங்களைக் குறைக்க அரசு விரும்புகிறது. அதே சமயம் தனியார் வர்த்தகத்துக்கு பெரிய பங்கை அளிக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கை எண்ணியுள்ளது.
அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி உலகெங்கும் முதலீடு செய்யும் நோக்கில் இரண்டு ட்ரில்லியன் டொலர் நிதியம் உருவாக்கப்படும்.
அரச எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு இந்த நிதியத்துக்கு தேவையான ஆதாரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
எனினும் முதல் கட்டமாக அராம்கோவின் 5 சதவீத பங்குகளை மட்டுமே விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் முடிவு செய்துள்ளார்.
தற்போது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் 19ஆவது இடத்தில் உள்ள சவூதி அரேபியாவை விரைவில் 15ஆவது இடத்துக்கு கொண்டு வருவதற்கான பல்வேறு பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் கொண்ட கையேட்டை வெளியிட்ட அவர் உள்நாட்டு இராணுவ செலவினங்களும் வெகுவாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.