தொழில்சார் கிரிக்கெட் விளையாட்டில் பங்குபற்றியதன் மூலம் இன்று கோடீஸ்வரராக வலம்வரும் சச்சின் டெண்டுல்கர், இளம் பராயத்தில் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வாகனத்தில் செல்ல பணமில்லாமல் நடந்து சென்றுள்ளார். இதனை அவராகவே அண்மையில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘டிஜிபேங்க்’ ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு பேசிய சச்சின், “மும்பை 15 வயதுக்குட்பட்டோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது எனக்கு 12 வயது. நான் உற்சாகமாக இருந்தேன், புனே சென்று அங்கு 3 போட்டிகளில் விளையாட வேண்டும்.
‘‘எனக்கு துடுப்பெடுத்தாடக் கிடைத்தபோது நான்கு ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனேன். இதனால் கடும் ஏமாற்றத்துடன் ஓய்வறைக்குத் திரும்பிய நான் அழத் தொடங்கினேன். அதன் பின்னர் அங்கு மழை பெய்யத் தொடங்கியதால் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வெளியே செல்வது, படம் பார்ப்பது, சாப்பிடுவது தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
பணத்தை எப்படி செலவு செய்வது, எப்படி சேமிப்பது என்று அறியாத நான், என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன்.
இந்நிலையில் மும்பைக்கு ரயிலில் திரும்ப என்னிடம் ஒற்றைக்காசு கூட இருக்கவில்லை. இரண்டு பெரிய பைகளை சுமந்துகொண்டு தாதர் ரயில் நிலையத்திலிருந்து சிவாஜி பார்க்கிற்கு நடந்து செல்ல நேரிட்டது’’ என்றார்.
‘‘இப்போது போல் அக் காலத்தில் செல்போன் இருக்கவில்லை. போன் இருந்திருந்தால் ஒரேயொரு எஸ்.எம்.எஸ். போதும் எனது போனுக்கு பணம் மாறியிருக்கும் நான் ஒரு கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வீடு சேர்ந்திருப்பேன்” என்று தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை எடுத்துரைத்தார்.
ஆனால், தொழில்நுட்பம் சில வேளைகளில் நமக்குச் சாதகமாக செல்லாது என்று கூறிய சச்சின் நகைச்சுவையுடன் கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு நேர்ந்த கதி ஒன்றை கூறினார்.
அவர் முதன்முதலில் மூன்றாவது மத்தியஸ்தரால் ரன் அவுட் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.
‘‘மூன்றாவது மத்தியஸ்தர் தீர்ப்பளிக்கும் முறை வந்தவுடனேயே எனக்கு முதன் முதலில் ரன் அவுட் தீர்ப்பு தான் அளிக்கப்பட்டது.
சில வேளைகளில் தொழில்நுட்பம் நமக்குச் சாதகமாக இருக்காது. நாம் களத்தடுப்பில் ஈடுபடும்போது மூன்றாவது மத்தியஸ்தரிடமிருந்து சாதகமான தீர்ப்பு நமக்குத் தேவைப்படும். ஆனால் துடுப்பெடுத்தாடும்போது அல்ல.
நான் 1989இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரவேசித்தபோது எங்களுக்கு முறையான அனுசரணையாளர் இருக்கவில்லை. ஆனால் 2002 – 03களில் ஓய்வறையில் கணினி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஓய்வறையில் கணினிக்கு என்ன வேலை? எப்படி துடுப்பெடுத்தாடவேண்டும் என்று கணினி கற்றுக் கொடுக்க முடியுமா? ஆனால் போகப்போக திட்டமிடுதல், செயல்படுத்துதல் வெறும் கற்பனை வளம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை அறிந்துகொண்டோம்.
அதாவது குறிப்பிட்ட ஒரு துடுப்பாட்டக்காரருக்கு இந்த இடங்களில் பந்து வீசக்கூடாது என்ற விபரங்களெல்லாம் கணினி மூலம்தான் கற்றுக் கொடுக்கப்பட்டது’’ என டெண்டுல்கர் மேலும் கூறினார். திட்டமிடுதலில் தொழில்நுட்பத்தின் பங்கு அபரிமிதமானது” என்றார் சச்சின் டெண்டுல்கர்.