சிறுபான்மை இனங்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் இம்முறை பிரதான அரசியல் கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் ஆகியோருக்கு மேடையில் பிரதான இடமளிக்கப்பட்டிருந்தது.
காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக அண்மைக்காலம் வரை செயற்பட்டுக்கொண்டிருந்த ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பதுடன் சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கூட மைத்திரியின் மேடையில் உரிய இடமளிக்கப்படவில்லை.
குறைந்த பட்சம் காலி மேதினக் கூட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்த முன்னாள் பிரதியமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தன கூட சுதந்திரக்கட்சி மேதின மேடையில் செல்லாக்காசாக மாறிப் போயிருந்தார்.
கடைசி நேரத்தில் கூட்ட மைதானத்துக்கு வருகை தந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அனைத்து ஏற்பாடுகளையும் பலவந்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன், தன்னை முதன்மைப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே மஹிந்தவின் மேதின மேடையில் எந்தவொரு சிறுபான்மை அரசியல்வாதிக்கும் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.