சபையில் கைகலப்பில் ஈடுபட்ட எம்.பிக்கள் தொடர்பில் இறுதி முடிவு இன்று

பாராளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட எம்.பிக்கள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்றையதினம் (05) ஆராயப்படவிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார்.

நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை தன்னிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சபைக்குள் இடம்பெற்ற கவலைக்குரியதும், வெட்கப்படக்கூடியதுமான கைகலப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைக் கொண்ட குழுவை நியமித்திருந்ததாகவும், இவர்கள் நேற்று முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்திருப்பதாகவும் சபாநாயகர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயும் நோக்கில் இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற விவகாரங்கள் குறித்த தெரிவுக் குழுவைக் கூட்டியிருப்பதாகவும், இதில் விரிவாக ஆராயவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.