ஆப்கான் – எண்ணைத்தாங்கி மோதிய விபத்தில் சுமார் 73 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கஸ்னி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய விபத்தில், குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் – கந்தகார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பஸ்களும் எண்ணெய்த் தாங்கியொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இரண்டு பஸ்களிலும் சேர்த்து, 125க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரில் பெண்களும் சிறுவர்களும் கணிசமானளவு காணப்படுவதாக அறிவிக்கப்படுவதோடு, உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், அடையாளங்காண முடியாத அளவுக்கு எரிந்து பொசுங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் கவூசி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73ஆக உயிரிழந்ததை உறுதிசெய்ததோடு, அது இன்னமும் அதிகரிக்கும் ஆபத்துக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

விபத்தில் மோதிய பஸ்ஸில் பயணித்து, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘எங்களுடைய பஸ் ஓட்டுநரில் தான் தவறு.

அவர் மிகவும் மோசமாக பஸ்ஸைச் செலுத்தி வந்தார். நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனேகமான பஸ் ஓட்டுநர்கள், போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை உடையவர்கள்” எனவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் அதிகப்பேர் உயிரிழந்த மோசமான விபத்துகளில், இந்த விபத்தும் ஒன்று எனக் கருதப்படுகிறது.