இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதை இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக இருந்த சோனா சவுத்தரி தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தான் எழுதிய “கேம் இன் கேம்” என்ற சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்திய கால்பந்து வீராங்கனைகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் ‘அட்ஜஸ்ட்’ செய்தால் தான் தெரிவு செய்வோம் என்று மிரட்டுவர். வேறிடங்களுக்கு விளையாட சென்றால் பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் வீராங்கனைகளின் அறைகளிலே தங்குவர்.
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களின் தொல்லைகளில் இருந்து தப்ப வீராங்கனைகள் நெருங்கிய தோழிகள் போல் நடித்தனர்.
இதையும் தாண்டி இந்திய கால்பந்து வீராங்கனையாக இருப்பது பெரிய விடயம், எனது ஜூனியர் வீராங்கனைகளுக்கு இந்த விடயத்தில் உதவி செய்ய முடியாமல் போனது ஏமாற்றம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பாலியல் மற்றும் பல்வேறு தொல்லை குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானாந்த சோனோவால் கூறியுள்ளார்.