மெதமுலன இல்லத்தின் காவல் பொலிசாருக்கும் அழைப்பாணை

ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரிய மாளிகையான மெதமுலன இல்லத்தின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிசாருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  தனது பதவிக்காலத்தில் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை முறைகேடாகப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையொன்றை நடத்தி வருகின்றது.

குறித்த விசாரணைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரண்டு தடவைகள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சமூகமளித்து சாட்சியமளித்துள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு பசில் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் மகளுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியிருந்தும் குறித்த அழைப்பாணை மீள் ஆணைக்குழுவிற்கு  திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  தனது உத்தியோகபூர்வ முகவரியாக ராஜபக்சவினரின் பரம்பரை மாளிகையான மெதமுலன இல்ல முகவரியையே கொடுத்துள்ளார்.

அந்த முகவரிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்று அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சமூகமளித்திருந்தார்.

இதற்காக மெதமுலன மாளிகையில் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பொலிசாரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெறும் வகையில் அவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.